தேசிய செய்திகள்
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்; கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த கைலாசா வெளியுறவுத்துறை
தேசிய செய்திகள்

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம்; கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த கைலாசா வெளியுறவுத்துறை

தினத்தந்தி
|
9 Jun 2022 5:00 PM IST

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாக டுவிட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது.

புதுடெல்லி,

பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். கைலாசா நாட்டிற்கென தனி பாஸ்போர்ட், குடியுரிமை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் கைலாசா குறித்து பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அண்மையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, கைலாசா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"முகமது நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கு கைலாசா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

கைலாச வெளியுறவு அமைச்சகம் இன்று மதியம் இந்திய உயர் ஸ்தானிகரை அழைத்து, இந்த சம்பவம் தொடர்பாக எங்களின் முழு கண்டனத்தை பதிவு செய்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த கட்சி நிர்வாகிகளை இடைநீக்கம் செய்ய ஆளும் கட்சி எடுத்த முடிவை கைலாசா வரவேற்கிறது.

அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கைலாசா கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்